அனிதா மேரி பாக்கியம்

சகோதரி அனிதா மேரி பாக்கியம்

(1975-2004)


"கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்" என யோவான் 12:24-ல் வாசிக்கிறோம். இப்படியாக இன்னொரு கோதுமை மணியாக மிஷனெரிகளின் கல்லறை' என்று அழைக்கப்பட்ட பீஹாருக்கு மிஷனெரியாகச் சென்ற சகோதரி #அனிதா_மேரி_பாக்கியம் 2004-ம் ஆண்டு 27-ம் தேதி ஜுலை மரித்தார். இன்று #மால்தோ மக்கள் மத்தி யில் பலநூறு திருச்சபைகள் எழும்பி ஓர் #இராஜ்மஹால்_பேராயம் தோன்றி மால்தோ விசுவாசிகளே ஆயர்களாகவும் பேராயராகவும் உருவாகியிருப்பதைக் காண்கிறோம். தங்கள் ஜீவனைப் பணயம் வைத்து உழைத்து மரித்த இந்த அர்ப்பணமுள்ள ஊழியர்களாலும், அநேகருடைய ஜெபத்தினாலும் ஈகை யினாலும் இது சாத்தியமாயிற்று.

இளமைப்பருவம்

சகோதரி  அனிதா மேரி பாக்கியம் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் 1975-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். அவருடைய தந்தை திரு. D.லூக் பால்ராஜ். ஒரு சாதாரண தொழிலாளி, அனிதா சிறுமியாக இருக்கும் போதே அவருடைய தாயார் கால மானார்கள். அனிதாவிற்கு ஒரு அக்காள் மட்டும் உண்டு. அவர் மிகவும் ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்து, தாயார் இல்லாது வளர்ந்தபடியால் பள்ளிப்படிப்பை கஷ்டப்பட்டு முடித்து, மேற்படிப்பிற்காகக் காத்திருந்தார். தேவனுடைய அளவற்ற கிருபையால் இளம்நிலை பட்டப்படிப்பை (பி.ஏ. பொருளாதாரம்) முடித்தார். . அதன்பின் தட்டச்சும் படித்து தேர்ச்சிப் பெற்றார். வேலைதேடிக் கொண்டிருந்தார். பிள்ளைகளைக் கவனிக்கும் முழுப் பொறுப்பும் தகப்பனுக்கு வந்ததால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். பின்பு இன்னொரு திருமணம் செய்து கொண்டார். இப்படிப் பட்ட திருமண உறவால் அனிதாவும் அவரது அக்காளும் சற்று சிரமத்திற்குள்ளானார்கள்.

இரட்சிப்பின் அனுபவம்

தூத்துக்குடியிலுள்ள தூய பேட்ரிக் ஆலய அங்கத்தினர்களாக அவர்கள் குடும்பம் இருந்தனர். அனிதா ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்வார். ஆலயக் காரியங்களில் உற்சாகமாகப் பங்கேற்பார். நல்ல கிறிஸ்தவப் பெண்ணாக வளர்ந்து வந்த அனிதா, ஒரு பெயர் கிறிஸ்தவள். இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்ற அனுபவம் இல்லை. இந்நிலையில் 1995-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஒரு உயிர்மீட்சிக் கூட்டத்தில் பங்குப்பெறும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கூடுகையில் ஆண்டவர் 1 யோவான் 1:7-9-ல் உள்ள வசனங்கள் வாயிலாக அனிதாவின் பாவத்தை உணர்த்தியபடியால், அவை களை அறிக்கைச் செய்து அன்றே பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். தன் வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணித்த அனிதா அன்றிலிருந்து வாழ்வில் நல்ல மாற்றங்களைப் பெற்றார். தவறாமல் வேதம் வாசித்து ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, திருச்சபையிலும் அவருடைய ஊரிலும் நல்ல சாட்சியைக் காத்துக் கொண்டு தேவனைப் பிரியப்படுத்தி வாழ்ந்து வந்தார்.

ஊழிய அழைப்பு வட இந்தியாவின் தேவையையும் ஆண்டவர் செய்யும் மகத்துவமான கிரியைகளையும் கேட்ட அனிதா, அதற்காக ஜெபித்து வந்தார்; தன்னுடைய நண்பர் களுக்கும் இயேசுவைப் பற்றி அறிவித்து வந்தார். லூக்கா 10-ம் அதி காரத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது அறுவடை மிகுதி. ஆண்ட வருக்காக ஆத்தும அறுவடைச் செய்ய எழுந்துச் செல்லும்படி தேவன் அவரை ஏவினார். இந்த ஊழிய அழைப்பை ஆண்டவர் இன்னொருஊழியக்காரர் வழியாக திரும்பவும் ஞாபகப்படுத்தி நிச்சயப்படுத்தினார். இன்னொரு நாள் வேதம் வாசிக்கும் போது மத்தேயு 28:7-ம் வசனத்தில் சீக்கிரமாகப் போய், கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைச் சொல்லும்படி கட்டளைப் பெற்ற மகதலேனா மரியாள் வாழ்வின் மூலம் தேவன் மறுபடியும் பேசவே, கர்த்தருடைய ஊழியத்திற்குத் தன்னை முழுமையாக அனிதா அர்ப்பணித்தார்.

#ஆண்டவர் அவரை ஊழியத்திற்கு அழைப்பதை அறிந்து மிஷனெரியாகச் செல்ல அர்ப்பணித்த அனிதா, மதுரையில் நடந்த நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் 3 நாள் கீதியோனியர் முகாமில் பங்குப் பெற்றார். தேவன் எரேமியா 4:8 மற்றும் எபிரெயர் 3:7, 8 வசனங்கள் மூலம் மறு படியும் பேசினபடியால் மிஷனெரியாகச் செல்ல முடிவெடுத்தார். குடும்பத்தின் தேவை, தன்னுடைய குடும்ப கடமைகள் இவற்றின் அழுத்தங்கள் மத்தியில், மும்பாய் பட்டணத்தில் நமது இயக்க ஜெபக்குழுத்தலைவியாகச் செயல்பட்டு வரும் அவருடைய உறவினர் ஒருவர் சகோதரி அனிதாவை நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் இணைய ஆலோசனை கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். எனவே, #நண்பர்_சுவிசேஷ_ஜெபக்குழு நடத்தின நேர்முகத்தேர்வில் 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் பங்குப்பெற்று. தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்குச் செல்லத் தயாரானார். தகப்பனார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்ப்பின் மத்தியில் துணிச்சலாக குடும்பத்தை ஆண்டவர் கரத்தில் ஒப்புவித்து, இந்த தீர்மானத்தைச் செய்தார். 1999- ம் ஆண்டு நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் மிஷனெரிப்பயிற்சிக்காக ஜான்சியில் உள்ள பெண்கள் மிஷனெரிப்பயிற்சி நிலையம் சென்று. ஒரு வருட பயிற்சியை முடித்தார். பயிற்சியின் போது அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டார். தனியாக, குழுவாக பாரத்தோடு ஜெபிக்கக் கற்றுக்கொண்டார். தேவனுடைய பணியை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றபின், துடிப்போடே பணித்தளம் செல்லத் தயாரானார். பயிற்சியிலேயே ஹிந்தி மொழியைக் கற்றுக் கொண்டார். நடை முறை ஊழியப்பயிற்சியின்போது. பல குடும்பப் பெண்களைச் சந்தித்து நற்செய்தியை ஜான்சி அருகே உள்ள கிராமங்களில் அறிவித்தார். பின்பு தேவனது அநாதி தீர்மானத்தின்படியே அவரை #ஜார்க்கண்ட் மாநிலத்தில் மால்தோ மக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியத் திற்கு அனுப்பினார்கள்.

மால்தோ ஊழியமும், திருமண வாழ்வும்

மால்தோ இன மக்கள் இராஜ்மஹால் மலைப்பிராந்தியத்தில் உள்ள சாஹிப் கன்ஞ், பாக்கூர், கொட்டா, தும்கா, ஜமாட்டிரா, டியோகார் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கிறார்கள். சௌரியா, குமார், மால் பகாரியா என்ற மூன்று வகையான மால்தோ இன மக்கள் இங்கு இருக்கிறார்கள். இவர்களைக் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி, பர்ஹர்வா என்ற பணித்தளம் திறக்கப்பட்டு, சுவிசேஷத்திற்கு நல் விளைவுகள் இங்கு காணப்பட்டன. இவர்கள் மத்தியில் பணியாற்றச் சென்ற பலர் நோயினால் பாதிக்கப்பட்டு, வேறிடம் சென்றனர். இங்கு மிஷனெரி திரு. ஜெயராஜ் மற்றும் அவரது சிறிய மகன் டேவிட் லிவிங்ஸ்டன் மலேரியாவினால் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர். ஆனாலும், பலர் தேவ பாதுகாப்போடே சுவிசேஷத்தை அறிவித்து ஏராளமான ஆத்துமாக்களைக் கிறிஸ்துவின் மந்தை யில் சேர்த்துள்ளனர். ஆழ்ந்த அர்ப்பணிப் போடே, மக்கள் பேசும் மொழியைக் கற்றுத் தேர்ச்சிப் பெற்று ஊழியம் செய்து வந்தார் அனிதா. படிப்பறியாத ஏராள மான மால்தோ சிறுவர் சிறுமியர்களுக்காக நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு விடுதிகளை அமைத்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளைச் சந்தித்து, அருகில் உள்ள பள்ளிகளில் படிக்க வைத்து திருச்சபையின் அடுத்த தலைமுறையினரை உருவாக்கி வந்தது. சப்பாண்டே என்ற இடத்தில் உள்ள மால்தோ விடுதிக்குப் பொறுப்பாகவும். மாணவ மாணவிகளை கிறிஸ்துவுக்குள் வளர்க்கும் பெரிய பொறுப்பையும் அனிதாவிற்குக் கொடுத்தனர். அதை சந்தோஷமாக அனிதா நிறைவேற்றி வந்தார். 2001-ம் ஆண்டு ஒரிசாவைச் சேர்ந்த சகோ. ஹமுவேல் லீமா என்ற மிஷனெரியுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் கத்திக்குண்ட் என்ற பணித்தளத்தில் தங்கியிருந்து குடும்பமாக ஊழியம் செய்து வந்தனர். ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து, ஒரு பெண் குழந்தையை 2002 மே மாதம் 4-ம் தேதி கொடுத்தார். குடும்பமாக பல கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்து வந்தார்கள்.

இறுதி நாட்கள்

ஒருநாள் குடும்பமாக தன் #கணவர் மற்றும் தன் குட்டி மகளோடு மோட்டார் சைக்கிளில் ஊழியத்திற்குச் சென்று வரும்போது, எதிர் பாராமல் அனிதா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார். அங்கு சரியான சாலை வசதியில்லாததை நாம் அறிவோம். இருக்கின்ற சாலைகளும் நன்றாகப் பேணிகாக்கப்படாதபடியால் மோசமான சாலைகளாகவே இருக்கும். அப்படிப்பட்ட மேடு பள்ளமான சாலையில் சாதாரண வேகத்தில் சென்றபோதிலும், ஒரு சிறிய மேடானப் பகுதியைக் கடக்கும்போது அனிதா தன் மகளோடு கீழே விழுந்து விட்டார். தலையில் அனிதாவிற்கு அடிபட்டு இரத்தம் அதிகம் வெளியேற அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரது தலையில் இருந்த ஹேர்பின் விழுந்த வேகத்தில் அவரது தலையின் உட்பாகத்தில் சென்றதால் அதிகமான இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. அதை யாரும் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. கோபிகந்தா என்ற இடத் திற்கு அனிதாவைக் கொண்டு சென்று முதல் உதவி கொடுத்தனர். போதிய வசதி இல்லாதபடியால், வேறு மருத்துவ மனைக்குச் செல்லத் தீர்மானித்து அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்கள். ஆனால் இரத்தம் மட்டும் நிற்காமல் வந்துக் கொண்டே இருந்தது. இந்த துயர சம்பவத்தைக் கேட்ட அங்குள்ள அனைத்து மிஷனெரிகளும் இணைந்தே அனிதாவைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுத்தார்கள். அனிதாவை உடனே தும்காவில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். இரத்தம் அதிகம் வெளியானதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி, சிகிச்சை எதுவும் பலனைத்தராமல் 27.07.2004 அன்று தேவ இராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். பின்பு பர்ஹர்வாவிலுள்ள வட இந்திய திருச்சபையில் அடக்க ஆராதனை நடத்தப்பட்டு, அங்கே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றைய பொதுச்செயலர் உடனே அங்கு விரைந்து சென்று அடக்க ஆராதனையில் பங்குப் பெற்றார்கள்.

அனிதா எப்பொழுதுமே சிரித்த முகத் துடனே காணப்படுவார். அனைவரையும் நேசித்து நல் உபசரணை அளிப்பார். மால்தோ மக்களை மிகவும் நேசிப்பவர். தேவனுடைய அநாதி தீர்மானத்தின் படி தனது இளம் வயதிலே தன் சிறு மகளையும் கணவனையும், அனைத்து மிஷனெரிகளையும் விட்டு தேவ இராஜ்யம் சென்றடைந்தார். மனித வாழ்க்கை எத்தனை சுருக்கமானது என்பதையும், நமது நிரந்தர நித்திய வாழ்வு என்றுமே நமது இரட்சகர் கிறிஸ்துவுடன் மட்டுமே என்பதையும் அனிதாவின் வாழ்வு நமக்குக் கூறுகிறது. இந்த நித்திய வாழ்விற்கு நீங்கள் ஆயத்தமா? நித்திய வாழ்வைப் பெற்றிராத மக்களை நித்தி யத்திற்கு நேராக வழி நடத்தும் மிஷனெரிப் பணியில் இன்றே ஈடுபடுங்கள். ஒரே ஒரு வாழ்க்கை அதுவும் சீக்கிரமாகக் கடந்துச் சென்று விடும். கிறிஸ்துவுக்காக செய்வது மட்டுமே நிலைத்து நிற்கும். அனிதாவின் இந்த அழகிய வாழ்விற்காகத் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

மதுரை Lady Doak college-ல் B.A., Psycology and Sociology பிரிவில் 2-ம் ஆண்டு பயின்று வருகிற இவர்களது செல்ல மகள் அரோமாவை நமது ஜெபத்தில் தாங்கிக் கொள்வோம்.

Comments

Popular posts from this blog

St.Patrick's History in Tamil

அசன பண்டிகை Asanam Festival

தூய பேட்ரிக் இணைப் பேராலயம்- St.Patricks Co-Cathedral (Short History)