தூய பேட்ரிக் இணைப் பேராலயம்- St.Patricks Co-Cathedral (Short History)

 


தூய பேட்ரிக் இணைப் பேராலயம் தூத்துக்குடி

 

235 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தூய பேட்ரிக் இணைப் பேராலயம் தூத்துக்குடி மாநகரின் சீர்திருத்த திருச்சபையின் முதல் தாய் திருச்சபை.

கிபி முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் சீடர் புனித தோமா வழியாக இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்துவிட்டது எனினும் தூத்துக்குடியில் 1789களில் திரு.ராயப்பன் மற்றும் திரு சத்தியநாதன் இருவரும் தூத்துக்குடி பகுதியில் செய்த ஊழியங்கள் மூலம் 200க்கும் அதிகமான நபர்கள் திருமுழுக்கு பெற்று சீர்திருத்த தமிழ் சபை வடக்கூரில்  உருவாக்கப்பட்டது. இங்கு Rev.J.J. பெஸ்ட் ஹென்றி போப், Rev .ரிச்சர்ட் போப் (Dr.G.U.போப்பின் இளைய சகோதரர்) இந்த பகுதியில் 1857 வரை பணி செய்தனர். இவருக்கு பின்பு 1857 ஆம் ஆண்டு புதியம்புத்தூரை மையமாகக் கொண்டு SPG மிஷனரி ஆக பொருப்பெடுத்தவர் Rev.J.F கேர்ன்ஸ். இவர் பணி செய்த 1857 முதல் 1873 காலத்தில் தூத்துக்குடி வடக்கூர் சபை புத்துயிர் பெற்றது. Rev.J.F கேர்ன்ஸ் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். இவர் தூய பேட்ரிக் ஆலயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

வடக்கூரில் அதிகம் கிறிஸ்தவர்கள் இருப்பதால் அவர்கள் வாழ்ந்து வரும் இடத்தின் அருகாமையில் ஆலயம் வேண்டுமென உணர்ந்து அதற்கான இடம் வாங்கப்பட்டு 1868 ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அஸ்தி பாரமிடப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 19.01.1873 அன்று பேராயர் பிரட்ரிக் ஜெல் அவர்களால் தூய பேட்ரிக் ஆலயம் என்று பெயரிடப்பட்டு மங்கல படைப்பு செய்யப்பட்டது. Rev.J.F.கேர்ன்ஸ் மிஷனரி அயர்லாந்தை சார்ந்தவர். தனது நாட்டின் அப்போஸ்தலரான தூய பேட்ரிக் அவர்களது பெயரை இவ்வாலயத்துக்கு சூட்டியுள்ளார்.

வடக்கூரில் சபை மக்கள் பெருகிய காரணத்தினால் தூத்துக்குடிக்கு  Rev.D.ஞானப்பிரகாசம் என்பாரை முதல் குருவாக 1869 ஆம் ஆண்டு நியமித்தார். 02.02.1869 முதல் தூத்துக்குடி தனி சேகரமாக இயங்க ஆரம்பித்தது இன்று 155 ஆண்டுகள் ஆகிறது. Dr.G.U.போப், ரிங்கல் தொபே, பேராயர் ராபர்ட் கால்டுவெல் போன்றோர் அடிக்கடி சபைகளை பார்வையிட்டு சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார்கள்.

 மிஷனரிகள் அறியாமை என்னும் இருளை அகற்ற கல்விக்கூடங்களை அதிகமாக உருவாக்கினர். 1800-81 ஆண்டுகளில் சாயர்புரத்தில் இருந்த சில பாடசாலைகள் கல்லூரி தற்போதைய கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது இங்கிருந்து SPG கல்லூரி 1884 ஆம் ஆண்டு முதல் தரமான கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவே பின்னாளில் திருச்சிக்கு மாற்றப்பட்ட பிஷப் ஹீபர் கல்லூரி ஆகும். 1883 ஆம் ஆண்டு பெண்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்டது. விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, இதோடு 1884 இல் தற்போதைய தூய பேட்ரிக் நடுநிலைப்பள்ளி 1887ல் திருமதி எலைசா கால்டுவெல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட விக்டோரியா ஆரம்பப் பள்ளி, 1916 இல் வடக்கூரில் ஆரம்பிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி என்று மிஷனரிகள் கல்வி பணியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.

 

 1894 ஆம் ஆண்டுகளில் 920 விசுவாசிகளுக்கு மேல் இருந்தனர். சண்முகபுரம் வட்டாரங்களில் அநேக கிறிஸ்தவர்கள் வசித்தபடியினால் அங்கு இரண்டு சபை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு தூத்துக்குடி சேகரத்தின் கிளை சபையாக தனித்து இயங்கி வந்துள்ளது.

 ஆலய வரலாற்றைப் பார்க்கும்பொழுது 1839 ஆம் ஆண்டு வடக்கூரில் கூரை வேய்ந்த ஆலயமும், 1872 ஆம் ஆண்டு Rev J.F.கேர்ன்ஸ் செய்ய கட்டிய ஆலயமும் (இதை 1894 ஆம் ஆண்டு சற்று விஸ்தரிக்கப்பட்டு உபயோகப்பட்டுள்ளது) பின்பு 1907 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இது 1960-66களில் Rev திரவியம் யேசுதாசன் அவர்கள் காலத்தில்  சிறிய ஆலயமாக காணப்பட தூத்துக்குடி துறைமுக கட்டுமான பணிக்கு பிரதம பொறியாளராக பணியாற்றி கொண்டிருந்தது திரு JJ கோயில் பிள்ளை இப்போது இருக்கும் ஆலய கட்டிட வரைபடங்கள் மற்றும் ஆலோசனை கொடுத்து தன் மேற்பார்வையில் கட்டி முடித்தார். ஆலய முகப்பு இரண்டு பக்கமும் சிறிய கோபுரத்தோடு பழைய கால கோட்டை போல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் ஆலயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு முதல் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஜாதி மதமின்றி அனைவரும் ஜெபித்து செல்ல வசதியாக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலய கோபுரம் Rev.J.ஸ்டீபன் அவர்களின் காலத்தில் திட்டமிடப்பட்டு Rev.J.ஜேசன் செல்வகுமார் அவர்கள் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 01.05.2002 அன்று Rev .D.J இர்வின் சார்லஸ் காலத்தில் பிரதம பேராயர் Most .Rev.K.J சாமுவேல் அவர்களால் மங்கள படைப்பு செய்யப்பட்டது.

2003 ஆம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து பிரிந்து புதிய திருமண்டலமாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் உருவாகியது. இதன் நிர்வாக வசதிக்காக 01.05.2015 அன்று தூய பேட்ரிக் ஆலயம் -இணைப் பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டது.

இயற்கை சீற்றங்கள், சுனாமி, நிலநடுக்கம், புயல், வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகையில் ஓடோடி சென்று உதவும் ஆலயமாக திகழ்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்வுகள் சிறப்பானதாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 1ம்  தேதி அசன பண்டிகை சிறப்பாக நடைபெறுகிறது.

இத்திருச்சபையில் தற்போது 1200க்கும் மேலான குடும்பங்கள் உள்ளன. இதில் தற்போது தலைமை குருவானவராக Rev.R.A.J. செல்வின் துரை அவர்களும்உதவி குருக்களாக Rev.M.காலேப் மேன்சிங் மற்றும் Rev.T.ஆனந்தமணி அவர்களும் சபை ஊழியர்களாக திரு.D.மாற்கு டைட்டஸ் மற்றும் திரு.K.எபநேசர் சாம் அவர்களும் பணியாற்றுகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க தூய பேட்ரிக் ஆலயத்தில் இருந்து சமாதான கர்த்தராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் குடும்பங்களில் உண்மையான மகிழ்ச்சியும், சமாதானமும், அமைதியும் உண்டாக இறை வேண்டுதல் செய்கிறோம்.

Comments

Popular posts from this blog

St.Patrick's History in Tamil

அசன பண்டிகை Asanam Festival